search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர்கள் கைது"

    சுற்றுலா செல்ல தாத்தா பணம் கொடுக்காததால் நகை கடையில் கொள்ளையடித்த கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பதி:

    சித்தூர் மாவட்டம் பலமநேரை சேர்ந்தவர் நியானசந்த் ஜெயின். இவர் பலமநேர் லிங்காயத் ரோட்டில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவருடைய பேரன் பிரதீப் ஜெயின் (21). இவர் பலமநேரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய பெற்றோர் இறந்து விட்டதால் தாத்தாவின் வீட்டில் தங்கி படித்து வந்தார்.

    இந்த நிலையில் தன்னுடன் படிக்கும் நண்பர்களுடன் கோவா, கேரளா சுற்றுலா செல்ல வேண்டும் என தன்னுடைய தாத்தாவிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிரதீப் தன்னுடைய நண்பர்கள் 6 பேருடன் நகைகளை திருட திட்டம் தீட்டினார். நேற்று மதிய உணவு இடைவேளையின்போது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு நியானசந்த் சென்றார்.

    இதை நோட்டமிட்டட பிரதீப் மற்றும் அவரது நண்பர்கள் கடையை திறந்து பீரோவில் இருந்த 1 கிலோ 240 கிராம் தங்க நகைகளை எடுத்து கொண்டு மீண்டும் கடையை பூட்டிவிட்டு தப்பி சென்றனர்.

    உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் கடையை திறந்து பார்த்தபோது பீரோவில் இறந்த நகைகள் மாயமானதை கண்ட நியானசந்த் ஜெயின் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்து ஈதுருபாஷா, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் கடையில் வேலை செய்யும் ஊழியரிடம் விசாரணை நடத்தினர்.

    அதன்பின் பிரதீப் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்ததால் அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது பலமநேர் பஸ் நிலையத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து பஸ் நிலையத்தில் இருந்த பிரதீப்பை பிடித்து சோதனை செய்ததில் அவர் வைத்திருந்த பையில் நகைகள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவருடன் இருந்த புரந்தர் ரெட்டி (21), பிரதிவ்ராஜ் (20) உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள கல்யாண் (20), குணசேகர் (20), யஸ்வந்த் (20) ஆகியோரை தேடி வருகின்றனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சுற்றுலா செல்ல தாத்தா பணம் கொடுக்காததால் நகைகளை திருடி வெளியே விற்று சுற்றுலா செல்ல இருந்ததாக தெரிவித்தனர். #tamilnews
    சேலையூரில் கஞ்சா வைத்திருந்ததாக 5 கல்லூரி மாணவர்கள் கைது ஆன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பள்ளிக்கரணை:

    சேலையூர், நியூபாலாஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் சிலர் கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பள்ளிக்கரணை போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் தங்கி இருந்த வாலிபர்கள் கஞ்சா பயன்படுத்துவது தெரிய வந்தது.

    அந்த வீட்டில் இருந்து அரை கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினார்கள். அங்கு தங்கி இருந்த 5 பேர் கஞ்சா போதையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து, கஞ்சா வைத்திருந்ததாக யோகேஷ், மெல்வின், ராஜு, கிருஷ்ணன், மனோஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் 4 பேர் என்ஜினீயரிங் மாணவர்கள். ஒருவர் கலைக்கல்லூரி மாணவர்.

    இவர்கள் அனைவரும் இந்த வீட்டில் தங்கி இருந்து அருகில் உள்ள கல்லூரிகளில் படித்து வந்தனர். கஞ்சா வைத்திருந்ததாக கல்லூரி மாணவர்கள் கைது ஆன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் ராக்கிங்கில் கைதான 3 மாணவர்களையும் கல்லூரியை விட்டு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    ஊட்டியில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு இளங்கலை, முதுகலை பாட பிரிவுகளில் 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இங்கு இளங்கலை விலங்கியல் துறையில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்களான அனிஷ் மைக்கேல், சுஜித் குமார், சிவகுமார் ஆகிய 3 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன் அதே துறையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலரை ராக்கிங் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் தலைமையில் இயங்கும் ராக்கிங் தடுப்பு குழு விசாரணை நடத்தியது. இதில் மாணவர்கள் 3 பேரும் ராக்கிங் செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 3 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது. மேலும் ராக்கிங் குறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தி ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் ராக்கிங் செய்த மாணவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    இது குறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தி கூறும் போது, கைதான 3 பேரையும் கல்லூரியில் இருந்து நீக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

    திருவல்லிக்கேணியில் இருந்து அண்ணாநகர் சென்ற மாநகர பஸ்சை கடத்திய 3 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    செமஸ்டர் விடுமுறைக்குப் பிறகு சென்னையில் உள்ள கலைக்கல்லூரிகள் கடந்த வாரம் திங்கட்கிழமை திறக்கப்பட்டன.

    கடந்த காலங்களில் கல்லூரி மாணவர்கள் செய்த அநாகரீக, அட்டகாச செயல்களை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு அத்தகைய சம்பவங்கள் நடக்க விடக்கூடாது என்று மாநகர போலீசார் முடிவு செய்தனர்.

    பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் ‘‘ரூட் தல’’ என்று ஒருவரை தேர்வு செய்து, அவர் தலைமையில் குழுக்களாக பிரிந்து அடாவடிகளில் ஈடுபடுவது உண்டு. அவர்களில் சிலர் ஆயுதம் ஏந்தவும் செய்கிறார்கள். இதைத் தடுக்க கடந்த மாத இறுதியில் 75 மாணவர்களை அழைத்து போலீசார் கவுன்சிலிங் செய்தனர்.

    அவர்களது பெற்றோரிடமும் அறிவுரை வழங்கப்பட்டது. என்றாலும் கல்லூரி திறந்த முதல் நாளே சில கல்லூரி மாணவர்கள் கும்பலாக பஸ்களில் ஏறி பாட்டுப் பாடுவதும், பெண்களை கேலி செய்யும் அநாகரீகத்தில் ஈடுபட்டனர். நான்கு நாட்களுக்கு முன்பு பட்டா கத்திகளுடன் சில மாணவர்கள் போலீசாரிடம் பிடிபட்டனர். இவையெல்லாம் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தன.

    அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் நேற்று சுமார் 150 மாணவர்கள் மொத்தமாக வந்து மாநகர பஸ் ஒன்றை மிரட்டி கடத்தி சென்ற சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. திருவல்லிக்கேணியில் இருந்து அண்ணாநகருக்கு செல்லும் 24 சி மாநகர பஸ் நேற்று மதியம் 2 மணி அளவில் அமைந்தகரைக்கு வந்தது. அங்குள்ள கல்லூரி நிறுத்தம் அருகே பஸ் நின்றது.

    பஸ்சில் ஓரளவு பயணிகள் இருந்தனர். அந்த நிறுத்தத்தில் இருந்து பஸ் புறப்பட முயன்ற போது சுமார் 150 மாணவர்கள் திபு, திபுவென ஓடி வந்து முற்றுகையிட்டனர். சுமார் 75 பேர் பஸ்சுக்குள் ஏறினார்கள்.

    டிரைவரை சூழ்ந்து நின்று கொண்ட சில மாணவர்கள் ‘‘பஸ்சை இடையில் எங்கும் நிறுத்தக் கூடாது’’. நாங்கள் நிறுத்த சொல்லும் வரை ஓட்டி செல்லுங்கள்’’ என்று மிரட்டினார்கள். டிரைவரும் கண்டக்டரும் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் அவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு ஏற்ப பஸ்சை கடத்திச் சென்றனர்.

    சுமார் 12 மோட்டார் சைக்கிள்களில் 30-க்கும் மேற்பட்டவர்கள் அந்த பஸ் முன்பு அணிவகுத்து சென்றனர். பஸ்சை அந்த மாணவர்கள் வேகமாக இயக்கவிடவில்லை. சில மாணவர்கள் பஸ் கூரை மீது ஏறி அமர்ந்தனர்.

    அமைந்தகரையை கடந்து அண்ணாநகருக்கு சென்ற போது, சில பயணிகள் இறங்க முயன்றனர். ஆனால் மாணவர்கள் அந்த பயணிகளை இறங்க விடவில்லை. அது போல நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏறவும் அந்த மாணவர்கள் அனுமதிக்கவில்லை.

    ஒரு கட்டத்தில் மாணவர்கள் பஸ் கூரையைத் தட்டி தாளம் போட்டனர். வாசலில் தொங்கிக் கொண்டு வந்த மாணவர்கள் ஆ... ஊ... என கோ‌ஷமும், சத்தமும் போட்டப்படி வந்தனர். சாலையில் சென்ற பெண்கள், இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்ற பெண்களை மிக, மிக அநாகரீகமாக கேலியும், கிண்டலும் செய்தனர்.

    இதற்கிடையே சில மாணவர்கள் ஜன்னல் கம்பிகளில் தொங்கியபடி பாட்டு பாடினார்கள். சில மாணவர்கள் பஸ் கூரையில் வெளிச்சம் வருவதற்காக அமைக்கப்பட்டுள்ள பகுதியை அடித்து உடைத்து சேதப்படுத்தினார்கள். டிரைவருக்கும் கண்டக்டருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவானது.

    நிலைமை எல்லை மீறி போவதை உணர்ந்த கண்டக்டர் தனது செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து டிரைவரும் அண்ணாநகரில் பஸ்சை ஓரம் கட்டி நிறுத்தி விட்டார். அவரை மீண்டும் பஸ்சை எடுக்கும்படி மாணவர்கள் மிரட்டினார்கள்.

    ஆனால் டிரைவர் மறுத்துவிட்டார். அப்போது ஒரு மாணவர், அந்த பஸ்சை ஓட்ட முயன்றார். அப்போது போலீசார் அந்த பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர்.

    போலீசை கண்டதும் பஸ் உள்ளேயும், பஸ் கூரை மீதும் அமர்ந்து அட்டூழியம் செய்து கொண்டிருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பஸ்சில் இருந்து குதித்து தப்பி ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை விரட்டி சென்று 3 மாணவர்களைப் பிடித்தனர்.

    அந்த மாணவர்கள் அண்ணாநகரை சேர்ந்த என்.தினேஷ் (19), திருவள்ளூரைச் சேர்ந்த எழிலரசன் (19), அம்பத்தூரைச் சேர்ந்த எல்.கணேசன் (18) என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் மூன்று பேரும் அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் ஆவார்கள்.

    பஸ்சில் அராஜகம் செய்த சுமார் 120 மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்த மாணவர்கள் அண்ணாநகர், அமைந்தகரையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் அவர்களைப் பற்றிய தகவல்களை போலீசார் திரட்டி வருகிறார்கள்.

    அந்த மாணவர்களையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கும்பலாக வந்து பஸ்சை கடத்தி அட்டூழியம் செய்த சம்பவம் அண்ணா நகர், அமைந்தகரை பகுதி மக்களிடம் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

    இத்தகைய அநாகரீக செயலில் ஈடுபடும் மாணவர்களை கண்டறித்து கடும் தண்டனை கொடுக்காவிட்டால் மாணவர்களால் பொது மக்களும், பெண்களும் பாதிக்கப்படும் அபாயம் தொடர்ந்து விடும் என்று பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    சென்னையில் ஆடம்பர செலவுக்காக செல்போன் பறித்த 2 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பூர்:

    பெரம்பூர் மேம்பாலம் அருகே செம்பியம் போலீஸ் உதவி கமி‌ஷனர் ஹரிகுமார், இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் நேற்று இரவு 11 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக வந்தனர். அவர்களை நிற்கும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால் அந்த மோட்டார் சைக்கிள் நிற்காமல் வேகமாக சென்றது.

    போலீசார் தங்களது வாகனத்தில் விரட்டிச் சென்று, மோட்டார் சைக்கிளை மடக்கிப் பிடித்தனர். அதில் இருந்த 2 பேரையும் செம்பியம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    அப்போது, அவர்கள் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் என்றும் பொருளாதாரம் 2-வது ஆண்டு படித்து வருகிறார்கள் என்பதும் தெரியவந்தது.

    இதில் ஒருவர் கொடுங்கையூரை சேர்ந்த கிறிஸ்டோபர் (19), இன்னொருவர் மோகன சித்தன் (19) எருக்கஞ்சேரியை சேர்ந்தவர்.

    இவர்களிடம் விலை உயர்ந்த 3 செல்போன்கள் இருந்தன. இவை வரும்வழியில் வழிப்பறி செய்யப்பட்டவை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    அதில் ஒன்று மாதவரம் நெடுஞ்சாலையில் இரவு 9 மணி அளவில் பேசிக்கொண்டிருந்த பிரவீன்ராஜ் என்பவரிடம் பறிக்கப்பட்ட செல்போன் என்பது தெரியவந்தது.

    இதுபற்றி ஏற்கனவே அவர் செம்பியம் போலீசில் புகார் செய்து இருந்தார். இதுபோல் மற்ற 2 செல்போன்களும் வழிப்பறி செய்யப்பட்டவை என்பதை மாணவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து மாணவர்கள் கிறிஸ்டோபர், மோகன சித்தன் இருவரையும் செம்பியம் போலீசார் கைது செய்தனர். இது குறித்து மாணவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    கல்லூரி தொடங்க இருக்கிறது. கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும். ஆடம்பர செலவுக்கும் பணம் தேவை. எனவே, விலை உயர்ந்த செல்போன்களை பறித்து பணம் சம்பாதிக்க திட்டமிட்டோம்.

    சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த ஒருவர் செல்போன்களை வாங்கிக் கொண்டு பணம் தருவதாக கூறினார். எனவே ஆடம்பர செலவுக்கு பணம் கிடைக்கும் என்பதால் வழிப்பறி செய்தோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Tamilnews
    ×